32:36:47
இருக்கு வேதம் காண்டம்-32, மண்டலம்-36, நாள் உரைக்கோவை வாசகம் 47
“இப்பரந்த வையகத்தில் இயற்கையாக, பல்வேறான தட்ப வெப்ப நிலைகளுக்கும், மண்வளங்களுக்கும், நீர் வளங்களுக்கும் ஏற்ப அணுக்கள், உயிரணுக்கள், அருளணுக்கள் இணைத்தும் பிரித்தும் கூடியும் கணக்கற்ற வகைவகையான பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றியதுபோலவே, ‘கணக்கற்ற வடிவ, வண்ண, உருவ, தோற்ற, அங்க, அழகு வடிவங்களில் வெவ்வேறான அமைப்புக்களை உடைய மானுடர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் தொடர்ந்து பிறப்புக்கள் தோறும் அவரவர்கள் தோன்றிய இடங்களிலேயே தொடர்ந்து தோன்றிடுவர் என்பதனால்; அவரவர் தங்கள் தங்களுடைய நாட்டையும், நாட்டாரையும், இனத்தையும், இனத்தாரையும், மொழியையும், மொழியாரையும் விரும்பி போற்றிப் பாதுகாத்து பெருமிதமிக்க உரிமைமிக்க வாழ்வுடன் வாழச் செய்திடல் வேண்டும். அதனால், தம்மைப் போலவே ஒவ்வோர் நாட்டாரும், இனத்தாரும், மொழியாரும், அவர்க்குரிய நாட்டையும், நாட்டாரையும், மொழியையும், மொழியாரையும், இனத்தையும், இனத்தாரையும் கெடுதலே வராத விடுதலை வாழ்வு, உரிமைமிக்க பெருமிதவாழ்வு வாழுதற்கு உதவிடல் வேண்டும். இதற்காகவே, இந்துவேதம் நாட்டு விடுதலை, இன விடுதலை, மொழி விடுதலை எனும் முக்கோண தத்துவப் பீடத்தையே இந்துவேத பீடமாக அறிவிக்கிறது.