Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்துமதம்

இந்துமதம்

இந்து வேத மதமான இந்துமதம்

1. இந்து, வேதம், மதம், இந்துவேதம், இந்துமதம் என்ற ஐந்து சொற்களுக்கும் இந்து வேதத்தின் பூசை மொழி, பூசை விதி, தத்துவம், செயல் சித்தாந்தம், எனும் நான்கு வகைப்பட்ட நூல்களிலும் மிகமிகத் தெளிவான, எளிமையான, வரையறை செய்து முடிவு செய்யப்பட்ட பொருள் விளக்கங்களும், கருத்து விளக்கங்களும், செய்திகளும் தரப் பட்டிருக்கின்றன. எனவே இந்து வேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடர் முறையான, நெறியான, நிறைவான பொருளை முழுமையாகத் தரக் கூடியதாக இருக்கின்றது.

2. இந்துமதமும் ஆதிசிவனாரும்:-

முதன்முதல் இம்மண்ணுலகுக்கு இளமுறியாக் கண்டத்து பஃறுளியாற்றங் கரைத் தொன்மதுரையில் முத்தமிழ்ச் சங்கத்தையும், பதினெண்சித்தர் மடம் பீடம் கருகுலத்தையும் முழுமையாக நிறுவி அரசியல் சட்டப்பூர்வமாக இந்து வேத மதமான இந்து மதத்தை அறிவித்தவர் ஆதிசிவனார் என்பவர் ஆவார்.

இவரே முதல் யுகத்திலிருந்த மூலப் பதினெண் சித்தர்களின் தலைவர் ஆவார். எனவே இவர், முதல் பதினெண் சித்தர் பீடாதிபதியாக அருளுலகத்தவர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டார்.

3. இந்த ஆதிசிவனாரே இம்மண்ணுலகைப் பொறுத்த வரை முதலில் முடிசூடிய அரசராவார், மன்னனாவார், வேந்தனாவார். இவருடைய அரசு பண்டைய அரசு எனும் பொருள்பட பாண்டிய அரசு என்றழைக்கப்பட்டது.

இவர் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், இரங்கல் எனும் ஐந்தொழில்களையும் செய்யும் வல்லமை பெற்று விளங்கினார்.

இவர் தனக்குத் துணையாக இருந்த அனைத்து வகைப்பட்ட அருளுலகத்தவர்களுடன் சேர்ந்து இம்மண்ணுலகில் அருளுலகத்திற்குரிய அல்லது அருளுலகத்திற்குத் தேவைப்படுகின்ற அனைத்து வகைப்பட்ட அருவங்கள், அருவுருவங்கள், உருவஅருவங்கள், உருவங்கள் எனும் நான்கினையும்; இவற்றின் நான்கு வகைப்பட்ட செயல் வடிவங்களான திருக்கல், தருக்கல், கருக்கல், குருக்கல் எனும் நான்கு வகையினரையும் ஆக மொத்தம் பதினாறு வகைப்பட்ட அருளுலகத்தவர்களையும் தோற்றுவித்தார்.

அத்துடன் இவரே, இவர்களின் வாழிடங்களான நாற்பத்தெட்டு வகைக் கருவறைகள், நாற்பத்தெட்டு வகை வெட்டவெளிக் கருவறைகள், நாற்பத்தெட்டுவகை (48) வழிபாட்டு நிலையக் கருவறைகள், நாற்பத்தெட்டு வகை (48) கோயில் மூலக் கருவறைகள் எனும் நான்கு வகை வாழிடங்களையும் தோற்றுவித்துத் "தாயின் கருவில் குழந்தை வளர்ந்து பிறந்து பால் குடிக்கும் பருவம் வரை தாயின் மடியிலேயே வளர்வது போல்" இவைகளை நன்கு வளர்த்துக் காத்து உலகில் செயல்படச் செய்யும் பொறுப்பையும் ஏற்றார்.

எனவேதான், அருளுலகத்திற்குத் தேவையான அனைத்தையும் கருவாக்கி, உருவாக்கித் தரும் செயல்களை இரவில் செய்யக் கூடிய திங்கள் குலத்துக்குரியவர், (சந்திர குலத்திற்குரியவர், மதிகுலத்திற்குரியவர்) இந்தச் சிவனார்.

4. இந்த திங்கள் குலத்துச் சிவனாருக்கு அருளுலக ஆட்சிப் பணிக்காக மூலப் பதினெண் சித்தர்களிலிருந்தே சிலர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இந்தச் சிலரிலும் சிலருடைய பெயர்கள் மட்டுமே வெளியிடப் படுகின்றன. மூலப் பதினெண் சித்தர்கள் யார் யார் என்ற பெயர் பட்டியல் விவரம் பதினெண்சித்தர் பீடாதிபதிகளைத் தவிர மற்ற யாருக்கும் தெரியக் கூடாது. தெரிவிக்கப் படவும் கூடாது என்று மூலப்பதினெண் சித்தர்களே மிகத் தெளிவாகக் கட்டளை யிட்டிருக்கிறார்கள்.

அதாவது, இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் பொறுத்தவரை குறிப்பிட்ட கருத்துக்கள், செய்திகள், செயல் நடைமுறைகள், உண்மைகள். . . குறிப்பிட்டவர்களன்றி அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்களன்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது.

இப்படி குறிப்பிட்டவர்களன்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று ஆணையிடப்பட்டுக் காக்கப் படுபவை அனைத்தும் மறைத்துக் காக்கப்பட வேண்டியவை என்ற பொருளை உடைய மறை என்ற சொல்லால் பெயரிடப் படுகின்றன.

இந்த மறைகளே இந்து வேதமும் இந்து மதமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் படிக் காத்து வளர்த்து வருகின்றன என்பதுதான் உண்மை, உண்மை, உண்மை.

5. அருளுலகில் ஆதிசிவனாரின் அருளாட்சிக்குத் துணையாக அமைச்சர் என்ற நிலையில் கருவூறார், காக்கையர் எனும் காகபுசுண்டர் ஆகிய இருவரும் மற்றும் சிலரும் நியமிக்கப் பட்டனர்.

இவர்களைப் போலவே அருளாட்சியின் காவல் பொறுப்புகளையும், பாதுகாப்புப் பொறுப்புகளையும் கவனிக்க மாயோன் (திருமால், பெருமால், நெடியோன்... என்ற மாற்றுச் சொற்களும் மாயோன் என்ற சொல்லுக்கு உண்டு) எனப்படும் ஒரு மூலப் பதினெண்சித்தர் நியமிக்கப் பட்டார்.

அடுத்து இம்மணணுலகிலுள்ள பிறப்புக்கள் அனைத்திற்கும் பொறுப்பாக இருந்து இம்மண்ணுலகின் பிறப்புத் தொழில் நிர்வகிக்கும் பணி பிறமண் என்ற ஒரு மூலப் பதினெண் சித்தரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இம்மண்ணுலகில் அனைத்து வகைப்பட்ட பயிரின உயிரினங்களுக்குரிய இயக்கங்களுக்கும் வாழ்நாட்களுக்கும், ஆயுட் காலங்களுக்கும் அவ்வப்போது முடிவுகட்டி, உலகின் இயக்க நிலைகள் பெரும் சுமையாகி விடாமல் பாதுகாத்திடும் பொறுப்பு; இயக்கங்களுக்கும் ஆயுட்காலங்களுக்கும் முடிவு கட்டும் (முடிவு, இறுதி, தோல்வி, நிறைவு, இறப்பு, சாவு. .. என்ற பொருள்கள் இறமண் என்ற சொல்லுக்கு உண்டு.) இறமண் எனும் பொருள் படும் இயமண் (எமண், தென் திசைக்கோன், தருமண். . என்ற மாற்றுச் சொற்கள் இயமண் என்ற சொல்லுக்கு உண்டு) என்ற பெயரை உடைய மூலப் பதினெண் சித்தர் ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இதேபோல் பொருளாதாரத்துக்குரிய அனைத்து வகையான நிறுவன நிர்வாக இயக்கப் பொறுப்புக்களை முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் குபேரன் (குப்பை, குப்பன், குப்பம், குபேரம். ... முதலிய சொற்கள் செல்வம், பொருள் வளம். . என்ற பொருட்களைத் தருவனவாகும். இந்தச் சொற்களின் அடிப்படையில் தான் குபேரன் என்ற சொல் உருவாக்கப்பட்டது) என்ற ஒரு மூலப் பதிணெண் சித்தரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இதேபோல், பொதுவாக அருளுலகிலுள்ள கணபாடிகள் முதல் கடவுள்கள் வரை உள்ள நாற்பத்தெட்டு (48) வகை தர திர திறப் பிரிவுக்கு உட்பட்ட கடவுள்களையும், மண்ணுலகில் தோன்றக்கூடிய சுரர், அசுரர், அரக்கர், இராக்கதர்... முனிவர், இருடி, தவசி, ஞானி, பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார், சித்து விளையாடல் காரர்,... முதலியவர்களையும் இணைத்துப் பிணைத்துத் தொடர்பு படுத்தி அருளுலக நிறுவன நிர்வாகங்களை யெல்லாம் முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பொருளாழமிக்க இந்து என்ற சொல்லோடு தரம், திரம், திறம் என்ற தமிழின் மூன்று வகைப்பட்ட பண்புநிலை விளக்கச் சொற்களைச் சேர்த்து உருவான இந்திரன் என்ற பெயர்ச் சொல்லை பேராக உடைய இந்திரன் என்ற (இந்த இந்திரன் என்ற பெயர் இந்தரன் என்றம் இந்திரன் என்றும் குறிப்பிடுவது மரபு) ஒரு மூலப் பதிணெண் சித்தரிடம் ஒப்படைக்கப்பட்டது). . .

என்று இந்த மிகச் சில மூலப் பதினெண் சித்தர்களுடைய பெயர்கள் மட்டுமே வெளிப்படையாக இந்து வேத நூல்களிலும் இந்து மத நூல்களிலும் குறிக்கப் படுகின்றன, குறிக்கப் படுகின்றன, குறிக்கப் படுகின்றன.

இப்படி இந்து வேதம், இந்து மதம் அல்லது இந்து வேத மதமான இந்து மதம் முதலியவை பற்றிய விளக்கமான வரலாறுகள் வழங்கப் பட்டிருக்கின்றன, வழங்கப் பட்டிருக்கின்றன, வழங்கப் பட்டிருக்கின்றன.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே