அறிமுகவுரை
பதினெண் சித்தர் மடம்
1. இளைஞர்களாகச் சேர்ந்து உருவாக்கிட்ட இந்த இந்து இலக்கியக் கழகம் இருபதாண்டு காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றினை உடையதாகும். இந்த அமைப்பில், தொடர்ந்து பல இளைஞர்கள் பங்கு பெற்று உடலுழைப்பையும், பொருள் உதவியினையும் வழங்கி வந்துள்ள காரணங்களால்தான்; பதினெண் சித்தர் மடத்தில் ஏடுகளிலிருந்து எடுத்து எடுத்து எழுதப்பட்டு எழுத்து மங்கியும், தாள் நைந்தும், சிதைந்தும், அழிந்து கொண்டிருக்கக் கூடிய தமிழ் மொழியின் இலக்கியச் செல்வங்கள் பாதுகாக்கப்படும் பணியும், வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் பணியும் நிகழ்ந்து வருகின்றன.
2. பதினெண் சித்தர்களின் படைப்புக்களால் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கு வகை வாழ்வியல்களும் செம்மைப் பட்டு உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு உருவாகிடும். அதன் மூலம் அருளுலகப் பொருளுலக இருள்களும், இன்னல்களும், இடுக்கண்களும், கறைகளும், குறைகளும் பெருமளவில் அகற்றப் பட்டிடும்.
அதற்கு, பதினெண் சித்தர்கள் தருகின்ற வரலாறு, மொழி, இனம், மதம், நாடு, இலக்கியம், மருத்துவம், கவின்கலைகள், ஆயகலைகள், அருட்கலைகள், வானியல், மானுடவியல்.... முதலியவை பற்றிய செய்திகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப் பட்டு பரப்பப் பட்டாக வேண்டும்.
இன்றைய நிலையில் குமரி முதல் வட இமயம் வரை இந்துமதம் யாண்டும் பரவியுள்ள இந்துமத இந்தியாவின் நல்வாழ்வுக்குரிய சாதனைகள் பதினெண் சித்தர்களின் படைப்புக்கள் மூலம் சாதித்துக் காட்டப் பட்டாக வேண்டும். அதற்காகத்தான், இம் மண்ணுலகின் முதல் மொழியாகவும், மூல மொழியாகவும் விளங்குகின்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் பதினெண் சித்தர்களின் படைப்புக்கள் விரைந்து விரிந்து வெளியிடப்பட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
இப்பணியை முன் நின்று செய்து வரும் இந்து இலக்கியக் கழகத்துக்கு எல்லோரும் தங்களால் இயன்ற உதவிகளை நல்க வேண்டும் என்று அறிவித்துக் கொள்கிறோம். இந்த இந்து இலக்கியக் கழகம் மாபெரும் வெற்றியினைப் பெறட்டும் என்று வாழ்த்துகிறோம்.