இந்து வேத சூலகங்கள்
தமிழிலக்கியங்களே இந்துவேதக் கருவூலங்கள்:
‘இந்த அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான்; இம்மண்ணுலகில் எழுதப்படுகின்ற இலக்கியங்கள் அனைத்துக்கும் வழிகாட்டியாக, அடிப்படைகளாக, நெறிகாட்டிகளாக, முறை விளக்கிகளாக, அண்ட பேரண்டங்களில் வளரும், வளர்ந்திட்ட, வளர்ந்து கொண்டிருக்கின்ற, வளரப் போகின்ற முத்தமிழ் மொழியின் இலக்கியங்களின் தொகுப்புகளாக; மூன்று வகைப்பட்ட இலக்கியங்கள்;
(1) உலகியல் வாழ்வியல்களை, அதாவது பொருளியல் வாழ்வியல்களை விளக்குகின்ற இலக்கியங்கள் மேல்கணக்கு இலக்கியங்கள் என்றும்,
(2) பொருளியல் வாழ்வியலுக்குத் தேவையான நேம, நியம, நிடத, நிட்டை, நீதி, விதி முதலியவைகளை விளக்குகின்ற இலக்கியங்கள் கீழ்கணக்கு இலக்கியங்கள் என்றும்,
(3) அருளுலக வாழ்வியலுக்குத் தேவையான வேதத்தை விளக்குகின்ற இலக்கியங்களும், மதத்தை விளக்குகின்ற இலக்கியங்களும் மையக்கணக்கு இலக்கியங்கள் என்றும்; மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு வகைக்கும் பதினெண் சித்தர்களை நினைவு கூர்ந்திடுவதற்காக பரந்து விரிந்துபட்ட அண்டபேரண்ட அருளாட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் இலக்கிய பரப்புக்களிலிருந்து, குவியல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியங்களின் தொகுப்பாக பதினெண் மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண் மையக்கணக்கு நூல்கள் என்று மூன்று வகைப்பட்ட தொகை நூல்கள் தயாரிக்கப்பட்டு; முத்தமிழ்ச் சங்கத்தின் மூலம் இம்மண்ணுலகுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பதினெண் மேல்கணக்கு நூல்களும், கீழ்க்கணக்கு நூல்களுமே முத்தமிழ்ச் சங்கத்தில் மிகுதியாகக் கற்பிக்கப்பட்டன. இந்த பதினெண் மையக்கணக்கு நூல்கள் பதினெண்சித்தர் மடத்திலும், பீடத்திலுமே கற்பிக்கப் பட்டன.
அதிலும், குறிப்பாக, இந்தப் பதினெண் மையக்கணக்கு நூல்களில் வேதத்தைப் பற்றிய நூல்கள் பதினெண்சித்தர் மடத்திலும், மதத்தைப் பற்றிய நூல்கள் பதினெண்சித்தர் பீடத்திலும் கற்பிக்கப்பட்டன.
இப்படி பதினெண் மேல்கணக்கு, கீழ்கணக்கு, மையக் கணக்கு நூல்களைக் கற்பிப்பதற்கு முத்தமிழ்ச் சங்கம், பதினெண்சித்தர் மடம், பதினெண்சித்தர் பீடம் என்ற மூன்று வகைப்பட்ட நிறுவன நிர்வாகங்கள் தோற்றுவிக்கப் பட்டிருந்தன என்பதும் சிறப்பாகப் போற்றிப் புகழ்வதற்குரியதாகும்.