07:19:29
இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 29
“அண்ட பேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் தங்களோடு பதினெட்டாம்படிக் கருப்புகளையும், கடவுளர்களையும், வழிபடு நிலையினர்களையும், சித்தர்களையும், மற்றவர்களையும் அவ்வப்போது துணையாக அழைத்துக் கொண்டு இம்மாஞாலத்தில் கல்தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே வந்து சென்று; அருட்கொடையாக இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் தேவைக்கேற்ப வழங்கியுள்ளனர். எனவேதான், பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வரக்கூடிய அனைத்து வகைப்பட்ட நோய்நொடிகளுக்குரிய சித்த மருத்துவத்தையும், சித்தர் மருத்துவத்தையும் இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் வழங்கியுள்ளனர். இதில் மிகத் தெளிவாக உயிருக்கு வரக்கூடிய நோய்கள், உடலுக்கு வரக்கூடிய நோய்கள், அவற்றிற்குரிய மருந்துகள் அனைத்தையும் வழங்கியுள்ளனர். இம் மருத்துவ முறைகள் உலகம் முழுவதுமுள்ள அனைத்து வகைப்பட்ட நாட்டாருக்கும், இனத்தாருக்கும், மொழியாருக்கும் பயன்படக் கூடியவை. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ளாருக்குப் பயன்படக் கூடிய மருந்துகளைத் தயாரிப்பதற்குரிய கற்கள், மணல்கள், மண்கள், நீர்கள், உப்புகள், உலோகங்கள், ... அதிக அளவில் இந்துவேதமும், இந்துமதமும் பிறந்த தமிழ்நாட்டில் திருவிடத்தில் இந்தியாவில் மிகுதியாக இருக்கின்றன, கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் சித்த மருத்துவ முறைகளும், சித்தர் மருத்துவ முறைகளும் என்றென்றும் இலைமறை காயாக, நிலவறைக் கருவூலப் பொருள்களாக இருப்பதை உணர்ந்து உலகோர் உய்வு பெறல் வேண்டும்.