பத்தி 6
வேதம் என்ற சொல், வேதித்தல் அதாவது சமைத்தல், சமைத்துப் பதப் படுத்தப்பட்ட ஒன்று, அல்லது சமைத்துப் பக்குவப் படுத்தப்பட்ட ஒன்று என்ற பொருளைத் தருவதாகும்.
பதினெண் சித்தர்களின் அருளுலகப் படைப்புக்களில் நான் மறை, நான்முறை, நானெறி, நான் வேதம், எனும் பதினாறும் மிகமிக அடிப்படையான இலக்கியங்களாக இருக்கின்றன. இருந்தாலும் நான் மறை என்ற நான்கு இலக்கியங்களும் குறிப்பிட்டவர் அன்றி மற்றவர் அறியா வண்ணம் மறைத்துக் காக்கப்பட வேண்டியவையாகவே அறிவிக்கப் பட்டிருகின்றன.
நானெறி என்பவை குரு, குருக்கல், குருமார், பூசாரி எனப்படும் நால்வரும் மற்றபடி தவம், ஞானம் முதியவைகளைச் செய்யக் கூடிய அருளாளரும் எப்படியெப்படி வாழ வேண்டும் என்ற ஒழுகலாறுகளை, வாழ்வியல்களை, சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை விளக்குவனவாகும்.
நான்முறை என்பவை பதினெண் சித்தர்களுடைய அருளுலகச் செயல்பாட்டு விதிகள், அவற்றின் விளக்கங்கள், அவற்றின் பயன்கள், அவை சார்ந்த அருளுலகப் பொருளுலக நடைமுறைகள் முதலியவைகளையே விளக்குவனவாகும்.
நான்வேதம் என்பதில் இருடி வேதம், அசுரவேதம், யாம வேதம் அல்லது சாம வேதம், அதர்வான வேதம் என்ற நான்கு பகுப்புக்கள் இருக்கின்றன,
இவற்றிலுள்ள பூசை மொழிகள் நான்கு வகைப்பட்ட அருளாற்றல்களை வழங்கிடுபவையே ஆகும். இவைதான் அருளை அநுபவப் பெருளாகப் பெற்றுச் செயல்படக் கூடிய அருளாளர்களை உருவாக்கி, அவர்களை அருளுலகுக்குரிய சான்றுகளாகவும், ஊன்றுகளாகவும், வெளி உலகுக்கு வழங்குவனவாக இருக்கின்றன.
எனவே தான் இந்த வேதம் என்ற சொல் பதினெண் சித்தர்களுடைய அருளுலகப் போதனைகளையும், சாதனைகளையும் குறிப்பாக விளக்கக் கூடிய சிறப்பான சொல்லாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
இதன்படியே பதினெண் சித்தர்கள் தங்களுடைய கொள்கை, குறிக்கோள், கோட்பாடு முதலிய அனைத்தையுமே குறிக்கக்கூடிய பொருள் வளமும், பொருளாழமும் உடைய அழகிய இனிய செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லுடன் இந்த வேதம் என்ற சொல்லைச் சேர்த்து இந்து வேதம் என்ற பெயர்ச் சொல்லை உருவாக்கினார்கள்,
இருந்த போதிலும், இந்த இந்து வேதத்தால் உருவான மதத்திற்கு இந்து மதம் என்றே பெயர் வைக்கப்பட்டது. இந்து வேதமதம் என்ற பெயர் வைக்கப் பட வில்லை.ஏனென்றால் இந்து என்ற சொல்லிற்கே அதிக முதன்மைத்துவம் தரப்படுவது மரபாக இருக்கிறது.
இதனுடைய நேரடியான விளக்கத்தை இந்து வேதத்தைப் பின்பற்றக் கூடிய மக்களுக்கு இந்து வேத மக்கள் என்று பெயரிடாமல் இந்துக்கள் என்றே பெயர் வைக்கப் பட்டிருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இந்து என்ற சொல்லுக்கு விளக்கங்களைத் தருகின்ற ஏடுகளிலெல்லாம் பெரும்பாலும் ஆரம்பத்திலும், முடிவிலும், இந்து மதத் தந்தை, இந்து வேத நாயகம், இந்து வேத பீடம், இந்து வேதத் தலைமை ஆச்சாரிய மடம், பதினெண் சித்தர் மடம், பீடம், ஞானாச்சாரியார் முதலிய அருட்பட்டங்களில் சிலவாவது அல்லது முழுவதுமாவது தவறாமல் குறிக்கப் படுகின்றன.