பத்தி 17
இந்த இந்துவேதம் இம்மண்ணுலகுக்கு அண்ட பேரண்டங்களிலிருந்து வந்த மூலப் பதினெண் சித்தர்களாலும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் அனாதிக் காலம் எனப்படும் (4,85,920) நான்கு லட்சத்து எண்பத்தையாயிரத்து தொள்ளாயிரத்திருபது ஆண்டு காலம் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களுக்கு வழங்கப்பட்டதாகும்.
அதாவது இன்றைக்கு 1991க்கு நாற்பத்தி மூன்று லட்சத்து எழுபத்து மூவாயிரத்து தொண்ணூற்றிரண்டு (43,73,092) ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த இந்து வேதம் பதினெண் சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் வழங்கப்பட்டதாகும்.
இப்படி இந்து வேதம் நான்கு லட்சத்து என்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் இம்மண்ணுலகில் கொள்கை வடிவில், தத்துவ வடிவில், சொல் வடிவில் மட்டுமே வாழ்ந்திட்டது.
அதன் பிறகு தான் பஃறுளி யாற்றங்கரையில் நிறுவப்பட்ட தென் மதுரையில் இம்மண்ணுலகில் முதல் அரசான பாண்டிய அரசு ஆதிசிவனாரை முதல் அரசனாகக் கொண்டு உருவாக்கப்பட்டுச் செயல்வடிமான இந்துமதம் அறிவிக்கப்பட்டது.
அதாவது இந்த இந்துமதம் இன்றைக்கு 1991-க்கு முப்பத்தெட்டு லட்சத்து எண்பத்தேழாயிரத்து நூற்றெழுபத்திரண்டு (38,87,172) ஆண்டுகளுக்கு முன்னால், கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தின் பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த தொன் மதுரையில் தோன்றிய இம்மண்ணுலகின் முதல் அரசான திங்கள் குலத்து (சந்திர குலத்து) பாண்டிய அரசின் முதல் அரசான ஆதிசிவனாரின் ஆட்சியில்தான் அரசாங்கப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதுமுதல் கடந்த நான்கு யுகங்களில் அவரல்லாமல் பதினோரு பதினெண் சித்தர் பீடாதிபதிகள் வாழையடி வாழையெனத் தோன்றி இந்த இந்து மதத்தை அவ்வப்போது மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், வலிமைச் செழிச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்து வந்திருக்கிறார்கள்.
இதுதான், நமது இந்து மதத்தின் நான்கு யுக வரலாற்றுச் சுருக்கம்.