பத்தி 30
இந்து வேதத்தின் செயல் வடிவான இந்துமதம், தன்னால் உருவாகின்ற, அல்லது உருவாக்கப்படுகின்ற அருளாற்றல்களைச் சேமித்து அல்லது தேக்கி வைத்து உலகுக்கு வழங்குகின்ற சாதனம் அல்லது பாண்டம்தான் சக்கரம் எனப்படுவது.
இந்த சக்கரம் மூன்று பெரும் வகைகளை உடையதாகும். அதாவது, அலிநிலை ஆற்றல், பெண்நிலை ஆற்றல், ஆண்நிலை ஆற்றல் என்று மூன்று பெரும் வகையான ஆற்றல்களை உடைய சக்கரங்களையே அருளுலகின் முக்கோண அருட்பீடமாக உருவாக்கித் தருகிறது இந்து மதம்.
இதில்
- அலிநிலைக்குரிய திருப்பதிச் சக்கரம் என்பது நூற்றெட்டு (108) வகைப்படும்,
- பெண் நிலைக்குரிய சத்தி பீடச் சக்கரம் என்பது இருநூற்றி நாற்பத்து முன்று (243) வகைப்படும்,
- ஆண் நிலைக்குரிய சீவாலயச் சக்கரம் என்பது ஆயிரத்தெட்டு (1008) வகைப்படும்.
இவை மூன்றின் கூட்டுத் தொகையான ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது (1359) என்ற எண்ணிக்கையும்; இவை ஒவ்வொன்றுக்கும் உரிய 108, 243, 1008 என்ற மூன்று எண்ணிக்கைகளும் சேர்த்து மொத்தமுள்ள நான்கு எண்ணிக்கைகளும் புனிதமானவைகளாக கடவுட்தன்மை உடையவைகளாக, தெய்வீக ஆற்றல் உடையவைகளாக, அருட்பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளாக இந்து மதம் அறிவிக்கிறது.