Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 19

பத்தி 19

இந்து வேதமும் காலக் கணக்கீடும்.

இந்த இந்து வேதம் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக அண்ட பேரண்டங்களில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகும்.

எனவேதான் இந்த இந்து வேதம் 1,2,3, . . என்ற எண்களையும், எண்களின் வடிவங்களையும், எண்களின் வரிசை முறைகளையும்; கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எனும் நான்கு வகைப்பட்ட (சித்தர்கள் எதையும் நான்கு என்று பிரிக்கும் பழக்கப்படியே கணக்கியலிலும் பகுத்துள்ளார்கள் என்பது இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது) கணக்கியல்களையும் மிகமிகத் தெளிவாகவும், வரையறுக்கப்பட்ட உண்மைகளாகவும் பெற்றிருக்கிறது.

இதுவே இந்துவேதம் மிகப் பன்னெடுங் காலமாக பகுத்தறிவுப் போக்கில், அறிவு விழித்த நிலையில் வளர்க்கப் பட்டு வந்திருக்கிறது. அல்லது வளர்ந்திருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

இதைத்தான், இந்துமதத்தை முதன் முதல் அரசாங்கப் பூர்வமாக இம்மண்ணுலகுக்கு அறிவித்த ஆதிசிவனார்; இந்து வேதம் மனித வாழ்வுக்கு அடிப்படையான (1) எண்ணையும், எண் சார்ந்த கணக்கியலையும்; (2) எழுத்தையும், எழுத்து சார்ந்த இலக்கிய இயலையும் இரு கண்ணென வழங்கியதால்தான் விலங்குகளோடு விலங்குகளாக வாழந்த மணீசர்கள் மென்மையும், நுண்மையும், ஒண்மையும், திண்மையும், பாண்மையும் ஊற்றெடுக்கும் மனதையுடைய மனிதர்களானார்கள்.

அதனால்தான்,

  • 'இம்மண்ணுலகின் கடைசி மனிதர்கள் வரை இந்து வேதத்தை முறையாகவும் நிறைவாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றும்;
  • 'இம்மண்ணுலகில் தோன்றக் கூடிய மனிதர்கள் அனைவருமே இந்து வேதத்தால் மணீச நிலையிலிருந்து மனித நிலைக்குக் கொண்டு வரப்பட்ட மனிதர்களே. இவர்கள் தொடர்ந்து என்றென்றைக்கும் மனிதர்களாக இருப்பதற்காகவே வழங்கப்படும் இந்து வேதத்தின் செயல்வடிவான இந்து மதத்தை ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்துப் பயன்படுத்திடல் வேண்டும்' என்றும்;

ஆதிசிவனாராகிய யாம், பதினெண்சித்தர் மடம், பீடம் அமைக்கப்படும் இன்றைக்கு அறிவிப்புச் செய்கிறோம்.இதே அறிவிப்பைத்தான் யாம் முதலில் முத்தமிழ்ச் சங்கம் நிறுவிய போதும் அறிவித்தோம்.

அதாவது மனிதனுக்கு முதலில் மொழியறிவு தேவை, பிறகு மத அறிவு தேவை என்பதுதான் பதினெண் சித்தர்களுடைய முடிவான கருத்தாகும்.

இக்கருத்தே, இந்து வேதத்தில் கொள்கை அளவிலும், இந்துமதத்தில் செயல் வடிவிலும் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

இதைத்தான் அண்ட பேரண்டமாளும் இந்துவேதமும் இந்து வேதத்தின் செயல் வடிவான இந்து மதமும்,

  • 'மொழியே மனித வாழ்வின் விழியும் வழியுமாகும்',
  • 'மதத்தின் விழியும் வழியும் மொழிதான்',
  • 'மொழிதான் அருளுலகையும் பொருளுலகையும் இணைக்கும் சத்தி',
  • 'மொழிதான் மனிதர்களை அனைத்து வகையான அருளுலகத் தொடர்புகளுக்கும் உரியவர்களாக்குகிறது',
  • 'தமிழ் மொழி வழியாகத்தான் பிண்டங்கள், அண்டங்கள், பேரண்டங்கள், அண்ட பேரண்டங்கள் அனைத்தையும் அறியலாம், அனைத்தோடும் இணையலாம்',
  • 'தமிழ்மொழி வழியாக அனைத்து வகைப்பட்ட அருளுலகத்தவர்களோடு தொடர்பு கொள்ளலாம்',
  • 'தமிழ்மொழி வழியாகத்தான் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கினையும் பெற முடியும்',
  • 'தமிழ்மொழி வழியாகத்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற முன்றையும், இம் மூன்றும் கலந்து உருவாகும் சீவனையும் சேர்த்து ஆக மொத்தம் நான்கையும் முறையாகவும் நிறைவாகவும் தெரிந்து கொள்ள முடியும்',
  • 'தமிழ்தொழி வழியாகத்தான் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு எனும் மூன்றையும் முறையாகவும், நிறைவாகவும் தெரிந்து புரிந்து கொள்ள முடியும்',
  • 'தமிழ் மொழியின் ஒவ்வொரு எழுத்தின் வரி வடிவமும் ஒலி நயமும் அருளுற்றின் கண்களாகும், அருளுலகின் கண்களாகும்',
  • 'தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும் அருளாற்றலைப் பெற்றுத் தரக்கூடிய பூசைப் பொருளாகும்',
  • 'தமிழ் மொழியின் ஒவ்வொரு சொற்றொடரும் அருளை ஊற்றெடுக்கச் செய்யும் பூசை மொழியாகும்'

என்று பலவாறு முத்தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்ட பொழுது யாம் கூறியதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்படி யாம் கூறுவதற்குக் காரணம் இம்மணணுலகின் அருளுலகை நிறுவிய மூலப் பதினெண் சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆதிசினாராகிய யாமே தென் இமய மலையின் தென் கங்கை ஆறும், தென் யமுனை ஆறும், தென் இந்து ஆறும் உருவாக்கும் முக்கோணத் தீவில் மோகஞ்சிதறா நகரில் அனாதி காலந் தொட்டு இருந்தும் வரும் முத்தமிழ்ச் சங்கத்தையும் அதனருகிலுள்ள அருட்பா நகரில் உள்ள பதினெண் சித்தர் மடம், பீடம் முதலியவற்றையும் பஃறுளியாற்றங் கரையிலுள்ள தொன்மதுரைக்குக் கொண்டு வந்தோம்.

எனவேதான், தமிழ் மொழியின் அருமை, பெருமை, கடவுள் தன்மை, அருளாற்றல் முதலிய முதன்மையான செய்திகள் பலவற்றையும் முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட விழாவிலேயே அறிவித்து விட்டோம்.

இப்பொழுது பதினெண்சித்தர் மடம், பீடம் துவக்கப்படும் இந்த விழாவில் இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும், அருளுலகுக்கும், கடவுளர் உலகத்திற்கும், உயிர் மூச்சாக இருக்கின்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி பற்றிய பேருண்மைகள் பலவற்றையும் வெளியிடுகிறோம்...

என்று ஆதிசிவனார் தமது குருபாரம்பரியத்தில் குறிப்பிடுகிறார் -- என்றிப்படி பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் இந்துவேதம் பற்றியும்; இந்து மதம் பற்றியும் எழுதப் புகுந்த தமது, இலக்கியங்களில் அல்லது தமது படைப்புக்களில் எல்லாம் இந்து மதத்தைக் தோற்றுவித்த பதினெண் சித்தர் மடத்தின் முதல் மடாதிபதியாகவும், பீடாதிபதியாகவும், இம்மண்ணுலகின் முதல் அரசான பாண்டிய அரசின் முதல் அரசனாகவும் செயல்பட்டிட்ட ஆதிசிவனாரின் வாசகங்கள் எல்லாம் அப்படி அப்படியே எடுத்து எழுதுகிறார்.

இப்படி இவர் எழுதப் புகுந்ததற்குக் காரணம் இந்தக் கலியுகமாகிய நான்காவது யுகத்தில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய இவர்தான் இக்கலியுகத்தில் தோன்றிய முதல் பதினெண் சித்தர் பீடாதிபதியாவார்.

அதாவது கலியுகத்தில் பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவ நெறியான மெய்யான இந்துமதம் மிகுதியாக நலிந்தும், மெலிந்தும், சிதைத்தும், சீரழிந்தும், உருக் குலைந்து செல்வாக்கிழந்து போய்விட்ட காரணத்தினால்தான் மூலப்பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் இந்தப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி தோற்றுவிக்கப் பட்டார்.

அதாவது, இந்துமதம் செல்வாக்கிழக்கும் பொழுதெல்லாம் மூலப் பதினெண் சித்தர்கள் பதினெண் சித்தர் பீடாபதிபதிகளைத் தோற்றுவிப்பார்கள் என்பதே இந்து மதத்தின் மரபு.

உள்ளுறை

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே