இருக்கு வேதம் காண்டம்-10, மண்டலம்-23, நாள் உரைக்கோவை வாசகம்-35
“ஒவ்வொரு மனிதனும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அளவு விஞ்ஞானக் கருத்துக்களை, விஞ்ஞான முடிவுகளை, விஞ்ஞானிகளின் சாதனைகளை, போதனைகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற முற்பட்டேயாக வேண்டும். ஆனால், விஞ்ஞானச் சாதனங்களால் மானுடன் சோம்பேறியாகவோ, பிறரை அடிமைப்படுத்தி சுரண்டுபவனாகவோ, பிறரின் உடைமைகளையும் பெருமைகளையும் சொந்தங்களையும் சொத்துக்களையும் ஆக்கிரமிப்பு செய்பவனாகவோ, நாசப்படுத்துபவனாகவோ மாறிவிடக் கூடாது! மாறிவிடக் கூடாது! மாறிவிடக் கூடாது! மாறிவிடவே கூடாது!
அதாவது விஞ்ஞானம் என்பது எளிதில் கையாள முடியாதபடி இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது ஆகும். அதுவும் கைப்பிடி இல்லாமல் இருக்கக் கூடிய கூர்மையான கத்தி போன்றது. இதை உணர்ந்து விஞ்ஞானக் கலையை, மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் ஆக்கப் பணிகளுக்கு மட்டும் பயன்படும் வண்ணம் வளர்க்க வேண்டும். இல்லையேல் விஞ்ஞானக் கலையே; ஞானம், அகஞானம், புறஞானம், மெய்ஞ்ஞானம் எனும் நான்கும் கட்டிக் காத்து வரும் மனிதப் பண்பாட்டின் நளினத்தையும், இனிமையையும், கனிவையும், அழகையும், அமைதியையும், பற்றுப் பாசங்களையும், உறவின் உரிமை பெருமைகளையும், மானுட நேயத்தையும், தன்னம்பிக்கையையும், உலகியல் மீது நம்பிக்கையையும், அமைதி, அன்பு, அறம், பரிவு, ஈவு, இரக்கம், அடைக்கலமளித்தல், பிறருக்கு உதவுதல், பிறரோடு கூடி வாழல், … முதலிய இன்ன பிறவற்றையும் நோயுற்று நலிந்து மெலிந்து நாசமடையச் செய்து விடும். அதாவது, சுருக்கமாகச் சொன்னால் பேரழிவையே பெரும்பாலும் விளைவித்துத் தரக்கூடிய பண்பை பெற்றதுதான் விஞ்ஞானக் கலை”