யாமவேதம் காண்டம்-2, மண்டலம்-1, நாள்வாசகம்-10
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், அண்டபேரண்ட அருளாட்சிக்காக அருளியுள்ள இந்துவேதமான இருக்கு வேதம் இம்மண்ணுலகுக்கு அருளாட்சிக்காக ஆதிசிவனாராலும், அவரது திருக்குமரன் முருகனாலும் விண்ணுலக ஐவர் குழுவையும், மண்ணுலக ஐவர் குழுவையும் ஒன்று கூட்டி; இந்துவேதத்தின் பயன்களை விரும்புகிறவர், விரும்புகிற வண்ணம் துய்ப்பதற்காக முழுமையான இருக்கு வேதத்திலிருந்து மூன்று பகுதிகளை மட்டும் எடுத்து, அசுர வேதம், அதர்வான வேதம், யாமவேதம் என்ற மூன்று வேதங்கள் உருவாக்கப் பட்டன. ஆக வேதங்கள் இம்மண்ணுலகுக்கு ‘நாள் முழுவதும் பயன்படுவதற்கு இருக்கு வேதம்’ என்றும்; ‘பகல் முழுவதும் பயன்படுவதற்கு அசுர வேதம்’ என்றும்; ‘காலை மாலை பயன்படுவதற்கு அதர்வான வேதம்’ என்றும்; ‘இரவில் மட்டும் பயன்படுத்துவதற்கு யாமவேதம்’ என்றும் நான்காக வடிவப் படுத்தப் பட்டுவிட்டன.
ஆனால், இந்த நான்கிலும் உயிரோட்டமாக இருக்கக் கூடிய கருத்து:
“மூத்தோர்களை மதித்துப் போற்றிப் பேணிப் பாதுகாத்து வழிபடலும்; முன்னோர்களை ஆராய்ந்தறிந்து, தெரிந்து, ஆழச் சிந்தித்து, நீள நினைத்து பத்தி செய்தலேயாகும்” என்பதாகும். இதற்கு குடும்ப ஆண்டவர்களையும், குல தெய்வங்களையும் வழிபடக் கூடிய அமாவாசை வேள்வியும், பருவபூசையும் இருகண்கள் ஆகின்றன. இதேபோல, கிராமத்து தேவர் தேவதைகளையும், நாட்டுக் கடவுள்களையும், உலா நாட்களிலும் (உலா நாள் = திருநாள்), உலகியலார் விருப்பத்திற்குரிய நாட்களிலும் கொண்டாடி மகிழ்வதும்தான் இந்துவேதத்தின் இரு கண்களாகும். எனவே, குடும்ப ஆண்டவர்கள், குலதெய்வங்கள் பூசை செய்யப்படுவதும்; கிராமத்து தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுளர்கள் பூசை செய்யப்படுவதும் மறக்கப் பட்டாலோ, துறக்கப் பட்டாலோ, கண்ணிழந்தவர்களின் குருட்டு வாழ்க்கையைத்தான் பெறுவர் எல்லோரும்.”