01:08:21
அசுர வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் வாக்கு மலர்: 21 முதல் 28 வரை:
மானுடரில் எல்லோரையும் போல் கூட்டத்தோடு கூட்டமாக மேயச் சென்று திரும்புகின்ற ஆடுகளைப் போல், பிறந்து இறக்கின்ற மனிதர்களுக்கிடையில் மிகுந்த தன்னம்பிக்கையாலும், பேரார்வத்தாலும் மற்ற மானுடர்களிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு அரிய பெரிய முயற்சிகளை மேற்கொண்டு அசுர பத்தியால், அசுர சத்தி, சித்தி, முத்திகளைப் பெறுகிறவர்கள் தோன்றிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட குடும்பத்தின் ஆண்டவர்களாக மட்டும் இல்லாமல்; அக்குடும்பத்தார்களைச் சேர்ந்த அனைவர்க்கும் குல தெய்வங்களாக மாறுவார்கள். அம்மட்டின்றி அக்குலத்தார்கள் மிகுதியாக வாழுகின்ற கிராமத்துக்கு அக்கிராம தேவர் தேவதைகளாக மாறுவார்கள் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கிராமங்களிலும் குடியேறி செல்வாக்குப் பெறும் போது கிராம தேவர் தேவதைகளாக மாறிய குடும்ப ஆண்டவர்களே நாட்டுக் கடவுளர்களாக மாறிடுவார்கள்' என்பதேயாகும்.
இதன் மூலம் குடும்ப ஆண்டவர்கள் என்பவர்கள் குல தெய்வங்களாகவும், கிராம தேவர் தேவதைகளாகவும், நாட்டுக் கடவுளர்களாகவும் மாறுகிறார்கள் என்ற பேருண்மை தெரிகிறது. இதனால் அருளுலகில் ஆண்டவர், தெய்வம், தேவர், தேவதை, கடவுளர் எனப்படுகிற நால்வரிலும் மனிதர்களாகப் பிறந்தவர்களும் உண்டு என்ற பேருண்மை விளக்கமாகிறது. இதன் அடிப்படையில்தான் அருளுலகில் உள்ள ஆண்டவர், தெய்வம், தேவர், தேவதை, கடவுளர்களுக்கு மனிதர்களைப் போலவே விருப்பு, வெறுப்புகள் உண்டு; அன்புடன் ஆதரிப்பதும், நீதியுணர்வோடு கண்டிப்பதும், தண்டிப்பதும் உண்டு; மனித வாழ்வில் இருக்கின்ற எல்லா வகையான பழக்க வழக்கங்களும் உலகியல் நடைமுறைகளும் 'அருளுலக நால்வர்க்கும்' உண்டு.
(அருளுலக நால்வர் என்பது 1. குடும்ப ஆண்டவர், 2. குல தெய்வம், 3. கிராம தேவர் தேவதை, 4. நாட்டுக் கடவுளர் என்போரைக் குறிக்கும்.)