47:18:22

இருக்குவேதம் காண்டம் 47, மண்டலம் 18, நாள் உரைக்கோவை வாசகமலர் 22

நாம் கும்பிடுகின்ற கடவுள்கள், தேவர், தேவதைகள், தெய்வங்கள், ஆண்டவர்கள் எனப்படுகின்ற அனைவருமே திருமணம் ஆனவர்கள்தான். அதாவது இந்துவேதத்தின் இந்து மதத்தின்படியும் மூலக் கருவறை கடவுள்களுக்கு ஆண்டுக்கொருமுறை திருமண விழா கொண்டாடுகிறார்கள்.
அது மட்டுமல்ல, இரவில் ஒவ்வொரு கோயில்களிலும், அம்மையையும், அப்பனையும் நள்ளிரவு நடுநிசிப் பூசையின்போது (அர்த்தசாம பூசையின்போது) பள்ளியறைக்குக் கொண்டு சென்று இருவரையும் ஊஞ்சல் மெத்தையில் வைத்து இலேசாக ஊஞ்சலையும் ஆட்டிவிட்டு, அவர்கள் இரவில் சாப்பிடுவதற்கென்று பழங்களும், பலகாரங்களும், சுண்டக் காய்ச்சிய நல்ல பாலும் அருகில் வைத்து அந்த அறைக்கு சாம்பிராணிப் புகை போட்டு கதவைச் சாத்திப் பூட்டி யாரும் அம்மையப்பனைத்  தொல்லை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பூட்டிய கதவுக்கு சந்தனம் பூசி முத்திரையும் வைத்து விடுவார்கள். பிறகு மறுநாள் காலையில்தான் அதுவும் அதிகாலையில் சென்று திருப்பள்ளி எழுச்சிக்குரிய மந்தரங்கள், மந்திரங்கள், மந்திறங்கள், மாந்தரங்கள், மாந்தரீகங்கள் ஆகிய அனைத்தையும் திருப்பள்ளி எழுச்சியாக ஓதிய பிறகு கற்பூரச் சோதி காட்டி சாம்பிராணிப் புகை காட்டி மூடிய கதவைத் திறந்து உள்ளே இருக்கும் அம்மையும், அப்பனையும் தனித்தனியாக மேளதாளத்துடன் கொண்டு வந்து அவரவர் சன்னதியில் வைத்து நீராட்டி வாசனையுடைய திரவியங்கள் தடவி வேறு புதிய ஆடைகளை அணிவித்து மலராலும், நகைகளாலும் அலங்கரித்து கல்லால் செய்யப்பட்ட கருவறை மூலவர்களின் அருகில் கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குப் பிறகே கருங்கல்லால் செய்யப்பட்ட மூலவருக்கு நீராட்டி பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் நீராட்டியும், பால் பஞ்சாமிர்தம் முதலியவைகளால் நீராட்டியும், கடைசியில் வாசனைத் திரவியங்களைத் தடவி புத்தாடையும், பொன் நகைகளையும் அணிவித்து தலையில் பூச்சூட்டி, தலையில் பூமாலை அணிவித்து திருப்பாதங்களில் மலர்கள் தூவுகிறார்கள்.
இதன் விளக்கம் என்ன? கடவுள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அன்றாடம் மனைவியரோடு இல்லற இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுதான். இதனால்தான் கோயில் வளாகங்களில் திருமணங்கள் செய்வதும், திருமணமான ஆணும் பெண்ணும் தங்களுடைய முதல் இரவைக் கோயில் வளாகத்தில் தங்கி நிகழ்த்துவதும் தொன்று தொட்டு  நிகழ்ந்து வருகின்றன. ஆணும் பெண்ணும் இணைந்து இல்லற இன்பம் துய்ப்பது புனிதமானது! தெய்வீகமானது ஆகும் என்ற பேருண்மை தெள்ளத் தெளிவாக விளக்கப் படுகிறது.